Thursday, August 16, 2012

என் காதல் சொல்ல தேவை இல்லை

நீங்கள் காதல் கொண்டதுண்டா
உங்களை யாரேனும் காதலித்தது உண்டா

வெள்ளை உடையில்
உங்கள் காதல் வலம் வர
தூரம் சென்று ரசித்தது உண்டா

கண்கள் பார்க்கும் முன்
உங்கள் காதலின் வரவை
சுவாசம் உணர்த்தியது உண்டா

உறக்கம் கலைந்த
நடு இரவில் உறங்காமல்
உறங்கும் உங்கள் காதலை ரசித்தது உண்டா

கண்ணீர் கரிக்கும்
முத்தம் சுவைத்தது உண்டா

உன்னோடு நான் வாழ்ந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
என்ற வரிகளின் அர்த்தம் உணர்ந்தது உண்டா

தினம்  தினம்
ஒருவரிடம் ஒருவர்
தோற்று கொண்டே வெற்றி கொண்டது உண்டா

இவற்றில் ஏதேனும் இல்லை எனில்
மன்னிக்கவும்
என் காதல் உங்களுக்கு புரிவதர்கில்லை

Monday, April 23, 2012

உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா...

 

முத்தங்களோடு துவங்கியது அந்த நாள்

என் கண்கள் கன்னம் இதழ் என
தொடர்ந்து கொண்டே சென்றது
உன் முத்தங்கள்

முத்தங்களுக்கு மூச்சிரைத்த நொடியினில்
என்னை உண்ண தொடங்கினாய்

என் உடல் முழுதும் புசித்த பின்
என் மிச்சம் கொண்டு
புது என்னை படைத்தாய்

உன் எச்சங்களால் ஆன என் உடல்
உன் அடிமையாய் மாறி இருந்தது

Tuesday, August 3, 2010

கனவில் தொலைத்த நிஜங்கள்

அன்று இரவு கனவினில் நீ வந்தாய்
காதல் கொண்டாய்
என்னை உன் கனவுக்கு அழைத்து சென்றாய்

உன் கனவு உலகத்தின்
அழகிய நல்லவைகளை எடுத்து
நம் கனவு உலகம் படைத்தோம்
நம் உலகில் சென்று காதல் கொண்டோம்
காதல் செய்தோம்

நாட்கள் வருடங்களாய் உருள
மெல்ல கனவுகள் இடம் பெயர தொடங்கியது

யாரோ நம் உலகத்தை மாற்றி அமைப்பதை உணர்ந்தோம்

மூன்றாம் கனவின் எதோ ஒரு புள்ளி
நமது நிஜத்தோடு உறவாடியதில்
என்னுள் உள்ள உன் நினைவும்
உன்னுள் இருந்த என் நினைவும்
பாம்பு உருவம் கொண்டு நம் உலகம் புகுந்ததாய் அறிந்தோம்

அவற்றில் இருந்து தப்பிப்பதற்கு
தினம் வெகு தூரம் வெகு திசையில்
ஓட தொடங்கினோம்

துவண்டு விழுந்த ஒரு நாளில்
மெல்ல அது என் உடல் கிழித்து வெளி வந்து
என்னோடு புணர தொடங்கியது
புணர்தலின் உச்சத்தில்
பாம்பின் மேல் காதல் கொள்ள துவங்கினேன்
காதல் தொடங்கிய நொடியில்
மீண்டும் என் உடல் நுழைந்து மறைந்தது

ஒரு புன்னகையோடும்
நீல வண்ண உடலோடும்
உன்னை தேடினேன்

ஒரு புன்னகையோடும்
நீல வண்ண உடலோடும்
என்னை தேடினாய்

மீண்டும் சந்தித்த நொடியில்
உன்னை நானும்
என்னை நீயும்
கொலை செய்ய துவங்கினோம்

Wednesday, January 6, 2010

ஒரு காலையில் நீ இல்லை...விழித்திரையில் வழிந்தோடிய காட்சி ஒன்று
நினைவு அடுக்குகளில் இருந்து
தேடி எடுத்து வைத்தேன்

அதற்கு உன் முகம் அணிவித்தேன்
உடல் பூட்டினேன்
நீ என மாற்றினேன்

மனம் உயிர் தர முறையிட்டது
நிராகரித்தேன்

இது எனக்கான உனது பிம்பம்
இதன் கடவுள் நான்
பெற்றோர் நான்
சுற்றம் நான்
காதலன் நான்
குழந்தையும் நான்

நான் நான் நான் மட்டுமே

ஒரே முறை என் முன்னால் வந்து விடு
உன்னை கட்டி அனைத்து என்னுள் அமிழ்த்தி
எனது உயிரின் வேரில் படிந்து விட்ட
உனது வாசமும் இதழின் ஈரமும்
இதற்கு ஊட்ட வேண்டும்

பின் உன் உயிர் எடுத்து என் நினைவுகளில்
தொலைத்திட வேண்டும்

ஆம்
இது எனக்கான உனது பிம்பம்
உயிர் பெற்றால் உன்னை போல் விலகி விடுவாள்

Tuesday, December 1, 2009

ஒரு தெய்வம் தந்த பூவே...


குழந்தையின் சிரிப்பில் மட்டுமே
தோற்று போகிறேன்

விடிந்தது முதல்
சுமந்து கொண்டு திரிகிறேன்
அனைவருக்குமான முகமுடிகளை

கோவம் தெறித்த படி ஒன்று
காதல் பொழிந்த படி ஒன்று
கண்ணீரோடு ஒன்று
வெறுப்பு உமிழ்ந்த படி ஒன்று
மௌனம் சுமந்து ஒன்று

இப்படி சில இருந்தாலும்

அநேகம் சிரிப்பினை சுமந்த படியே...

தெருவில் எதிர்படும்
முகம் தெரியாதவைக்கு என்று சில

அலுவலக சகாக்களுக்கு என்று சில

புண்படுத்திய மனங்களை
மன்னிபதற்கு என்று சில

புண் பட்ட மனங்களுக்கு
ஆறுதலாய் சில

என

அநேகம் சிரிப்பினை சுமந்த படியே...

கொஞ்ச காலமாய்
குழந்தையின் சிரிப்பில் மட்டுமே
முகமுடிகள் தேடி தோற்று போகிறேன்

Monday, November 23, 2009

என் கவிதை எனபடுவது யாதெனில்...

உறக்கம் களைந்த ஒரு பின்னிரவில்
என் வெறுமையினை பங்கிட்ட வேளையில்
உன்னை என் கனவுகள் என்றேன்

ஆம் என்றாய்

அவளின் மேல் கொண்ட காதலில்
பின் அவள் பரிசளித்த பிரிவிலும்
உன்னை என் காதலி என்றேன்

ஆம் என்றாய்

தெளிந்த நீரோடையாய் மனம்
தெளிந்து அடங்கிய பொழுதுகளில்
உன்னை என் கவிதை என்றேன்

ஆம் என்றாய்

தொடக்கத்தின் முதல் படியில் முடிந்து விடும்
அர்த்தமற்ற உறவுகள் தரும் நினைவுகளில்
நீ எனது சிறு புன்னகை என்றேன்

ஆம் என்றாய்

இனி தோழியினை நீ என்பதா நீங்கள் என்பதா
என்ற கெட்டி மேளத்தையும் தாண்டிய பட்டி மன்றத்தில்
உன்னை என் தோழி என்றேன்

ஆம் என்றாய்

எண்ணங்களின் முரண்களில் சிக்கி
சிதறிய வார்த்தைகளை கோர்த்த பொழுதுகளில்
உன்னை கிறுக்கல் என்றேன்

ஆம் என்றாய்

ஓயாமல் கதறும் தனிமையினில் இருந்து
என்னை மீட்டு எடுத்த நேரங்களில்
உன்னை தேவதை என்றேன்

ஆம் என்றாய்

மன சலனங்கள் அடங்கிய வேளையில்
மௌனங்களோடு உரையாட தொடங்கிய பொழுதுகளில்
உன்னை என் மன கண்ணாடி என்றேன்

மௌனமாய் சிரித்தாய்

Monday, November 9, 2009

டிசம்பர் பூக்கள்


டிசம்பர் பூக்கள்

தினமும் மாலை
பூ விற்கும் பெண்ணிடம்
வாங்கி விடுவேன்

நான் தரும் ஐந்து ரூபாய்க்கு
சின்னதாய் மல்லிகை சரமும் சேர்த்து தருவாள்
நாசி தீண்டும் வியர்வையின் சொந்தகாரி

அன்றைய ஆத்திகனாகிய நான்
மல்லிகையினை சாமிக்கு இட்டேன்

இன்று குளிர் பெட்டியிலும்
நாளையின் காலையில்
உனது இயற்கை செயற்கை
கூந்தல் நடுவிலும்
பூத்து இருப்பாள்

பின் ஒரு நாள்
என்னவள் என நான் நினைத்த
அவள் கூந்தலிலும்
பூத்து இருந்ததாய் ஞாபகம்

இருந்தும் எனக்கு
ஏனோ என்றும் அவள்
உனது நரை முடி
டிசம்பர் ஆகவே தெரிந்து வந்தாள்

இரண்டு வருடமாய்
இந்த வெள்ளை தேசத்தில்
மலர் குவியல்களிலும்
மங்கையரின் மயிர் குவியல்களிலும்
ஏனோ அவள் தென்படவே இல்லை

இந்த வருட விடுமுறையில்
மீண்டும் ஒரு நாள்
உன்னை நரை முடி கிழவியின்
கூந்தலில் சிறை பிடிக்க வேண்டி
ஐந்து ரூபாய் தேடி எடுத்து வைத்தேன்

அந்த சிறிய மல்லிகை சரம்
இன்றும் தருவாளோ அந்த
நாசி தீண்டும் வியர்வையின் சொந்தகாரி