Tuesday, August 3, 2010

கனவில் தொலைத்த நிஜங்கள்

அன்று இரவு கனவினில் நீ வந்தாய்
காதல் கொண்டாய்
என்னை உன் கனவுக்கு அழைத்து சென்றாய்

உன் கனவு உலகத்தின்
அழகிய நல்லவைகளை எடுத்து
நம் கனவு உலகம் படைத்தோம்
நம் உலகில் சென்று காதல் கொண்டோம்
காதல் செய்தோம்

நாட்கள் வருடங்களாய் உருள
மெல்ல கனவுகள் இடம் பெயர தொடங்கியது

யாரோ நம் உலகத்தை மாற்றி அமைப்பதை உணர்ந்தோம்

மூன்றாம் கனவின் எதோ ஒரு புள்ளி
நமது நிஜத்தோடு உறவாடியதில்
என்னுள் உள்ள உன் நினைவும்
உன்னுள் இருந்த என் நினைவும்
பாம்பு உருவம் கொண்டு நம் உலகம் புகுந்ததாய் அறிந்தோம்

அவற்றில் இருந்து தப்பிப்பதற்கு
தினம் வெகு தூரம் வெகு திசையில்
ஓட தொடங்கினோம்

துவண்டு விழுந்த ஒரு நாளில்
மெல்ல அது என் உடல் கிழித்து வெளி வந்து
என்னோடு புணர தொடங்கியது
புணர்தலின் உச்சத்தில்
பாம்பின் மேல் காதல் கொள்ள துவங்கினேன்
காதல் தொடங்கிய நொடியில்
மீண்டும் என் உடல் நுழைந்து மறைந்தது

ஒரு புன்னகையோடும்
நீல வண்ண உடலோடும்
உன்னை தேடினேன்

ஒரு புன்னகையோடும்
நீல வண்ண உடலோடும்
என்னை தேடினாய்

மீண்டும் சந்தித்த நொடியில்
உன்னை நானும்
என்னை நீயும்
கொலை செய்ய துவங்கினோம்

Wednesday, January 6, 2010

ஒரு காலையில் நீ இல்லை...



விழித்திரையில் வழிந்தோடிய காட்சி ஒன்று
நினைவு அடுக்குகளில் இருந்து
தேடி எடுத்து வைத்தேன்

அதற்கு உன் முகம் அணிவித்தேன்
உடல் பூட்டினேன்
நீ என மாற்றினேன்

மனம் உயிர் தர முறையிட்டது
நிராகரித்தேன்

இது எனக்கான உனது பிம்பம்
இதன் கடவுள் நான்
பெற்றோர் நான்
சுற்றம் நான்
காதலன் நான்
குழந்தையும் நான்

நான் நான் நான் மட்டுமே

ஒரே முறை என் முன்னால் வந்து விடு
உன்னை கட்டி அனைத்து என்னுள் அமிழ்த்தி
எனது உயிரின் வேரில் படிந்து விட்ட
உனது வாசமும் இதழின் ஈரமும்
இதற்கு ஊட்ட வேண்டும்

பின் உன் உயிர் எடுத்து என் நினைவுகளில்
தொலைத்திட வேண்டும்

ஆம்
இது எனக்கான உனது பிம்பம்
உயிர் பெற்றால் உன்னை போல் விலகி விடுவாள்