
காதல் கொண்டாய்
என்னை உன் கனவுக்கு அழைத்து சென்றாய்
உன் கனவு உலகத்தின்
அழகிய நல்லவைகளை எடுத்து
நம் கனவு உலகம் படைத்தோம்
நம் உலகில் சென்று காதல் கொண்டோம்
காதல் செய்தோம்
நாட்கள் வருடங்களாய் உருள
மெல்ல கனவுகள் இடம் பெயர தொடங்கியது
யாரோ நம் உலகத்தை மாற்றி அமைப்பதை உணர்ந்தோம்
மூன்றாம் கனவின் எதோ ஒரு புள்ளி
நமது நிஜத்தோடு உறவாடியதில்
என்னுள் உள்ள உன் நினைவும்
உன்னுள் இருந்த என் நினைவும்
பாம்பு உருவம் கொண்டு நம் உலகம் புகுந்ததாய் அறிந்தோம்
அவற்றில் இருந்து தப்பிப்பதற்கு
தினம் வெகு தூரம் வெகு திசையில்
ஓட தொடங்கினோம்
துவண்டு விழுந்த ஒரு நாளில்
மெல்ல அது என் உடல் கிழித்து வெளி வந்து
என்னோடு புணர தொடங்கியது
புணர்தலின் உச்சத்தில்
பாம்பின் மேல் காதல் கொள்ள துவங்கினேன்
காதல் தொடங்கிய நொடியில்
மீண்டும் என் உடல் நுழைந்து மறைந்தது
ஒரு புன்னகையோடும்
நீல வண்ண உடலோடும்
உன்னை தேடினேன்
ஒரு புன்னகையோடும்
நீல வண்ண உடலோடும்
என்னை தேடினாய்
மீண்டும் சந்தித்த நொடியில்
உன்னை நானும்
என்னை நீயும்
கொலை செய்ய துவங்கினோம்